கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தனித்து களமிறங்கி உள்ளன. மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக முயன்று வருகிறது.
அதேவேளையில் பாஜகவில் இருந்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இதுதவிர தொங்கு சட்டசபை அமைந்தால் கிங்மேக்கராக ஜேடிஎஸ் மாறலாம். இதனால் கணிசமான இடங்களில் வெற்றி பெற அக்கட்சியும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
இதுதவிர ஆம்ஆத்மி, எஸ்டிபிஐ, பகுஜன் சமாஜ், ஜனார்த்தன ரெட்டியின் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் தங்களின் பலத்தை காட்ட தேர்தல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக கர்நாடகா சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வரான குமாரசாமியின் (முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன்) ஜேடிஎஸ் கட்சி, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு இருந்தது.
காங்கிரஸ் கட்சியை போல் இந்த இருகட்சிகளுக்கும் கர்நாடகாவில் வாழும் முஸ்லிம் மக்களின் ஆதரவு உள்ளது. இதனால் இருகட்சிகளும் கூட்டணி அமைத்து காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக செயல்பட திட்டமிட்டு இருந்தன.
ஆனால் தற்போது அந்த திட்டத்தை ஜேடிஎஸ் கட்சி கைவிட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஆனால் தற்போது அந்த திட்டத்தை ஜேடிஎஸ் கட்சி கைவிட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஜேடிஎஸ் கட்சி 148 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நேற்று மனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் இன்று பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் ஜேடிஎஸ் கட்சி தான் போட்டியிடாத பிற இடங்களில் வேறு கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த லிஸ்ட்டில் காங்கிரஸ் கட்சி இருக்கும் நிலையில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி இல்லை.
மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள பல தொகுதிகளில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிட்டாலும் கூட அந்த கட்சிக்கு ஜேடிஎஸ் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் இருகட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி உருவாகவில்லை. இதுதான் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.
இந்த கூட்டணி உருவாகாமல் இருந்ததன் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளதாம். இதுபற்றி ஜேடிஎஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‛‛மாநிலத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் அது பிற தொகுதிகளில் ஜேடிஎஸ் கட்சியை பாதிக்கும் என பல மூத்த தலைவர்கள் கூறினர். இதையடுத்து இந்த முடிவு கைவிடப்பட்டது'' என்றார்.
0 Comments